குழந்தை திருமணங்களை தடுக்க புதிய நடவடிக்கை


குழந்தை திருமணங்களை தடுக்க புதிய நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 PM GMT (Updated: 9 Aug 2018 11:56 PM GMT)

குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் செய்து வைக்கப்படும் திருமணங்கள் குழந்தை திருமணங்களாகும். கடும் சட்டங்கள் இயற்றி கடைப்பிடித்தாலும் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குடும்ப சூழ்நிலை, வறுமை, உறவு சங்கிலி தொடர்தல் போன்ற காரணங்களினால் குழந்தை திரு மணங்கள் நடைபெற்று வந்த நிலையில் பாலியல் தொல்லை, இனக்கவர்ச்சி வயப்படுதல் போன்றவற்றை தவிர்ப்பதற்காக தற்போது அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் பரவலாக நடந்து வந்தாலும் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் அதிகமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்களில் 13 சதவீதம் குழந்தை திருமணங்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி தகவலை தொடர்ந்து குழந்தை திருமணங்களை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். குழந்தை திருமணங்கள் என்பது பொதுவாக ஒரு தலைக்காதல் சமயங்களிலும், உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் போதும் தான் வெளியில் தெரிய வருகிறது. அதன் பின்னரே தடுக்க முடிகிறது. ஆனால், இந்த பிரச்சினைகள் இல்லாத இடங்களில் சர்வ சாதாரணமாக குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான ராமலிங்கம் கூறியதாவது:- குழந்தை திரு மணங்கள் குறித்த தகவல் தெரிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சென்று இருதரப்பினரிடமும் பேசி இதுவரை உறுதிமொழி எழுதி வாங்கி வந்தனர். அதன்பின்னர் குடும்பத்தினர் வெளிநபர்கள் யாருக்கும் தெரியாமல் கோவில்களில் வைத்து திரு மணம் செய்துவிடுவது வழக்கமாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குழந்தை திருமணம் தகவல் கிடைத்ததும் அதனை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தப்பட்ட பகுதி கோர்ட்டில் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான தடை உத்தரவு பெற்று இருதரப்பினரையும் சட்டத்தின் கண்காணிப்பிற்குள் கொண்டுவர புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இருதரப்பினரும் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டு குழந்தை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று சட்டப்படி உறுதி அளித்து அதனை கடைப் பிடிக்க வழிவகை செய்யப்படும்.

இதனை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பதோடு, திருமணத்தை செல்லாது என்ற அறிவிக்கவும், தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டத்தில் வழிவகை உள்ளதால் அந்த நடைமுறை பின்பற்றப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட துறை மற்றும் பிரிவு அதிகாரிகளுக்கு வருகிற 16-ந்தேதி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள சுதந்திர தினவிழா சிறப்பு கிராம சபை கூட்டங்களில் குழந்தை திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்பதை தீர்மானமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வயது சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே பத்திரிகை, பிளக்ஸ் போர்டுகள் அடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story