தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம்


தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:45 PM GMT (Updated: 9 Aug 2018 9:06 PM GMT)

வந்தவாசி அருகே பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி,

வந்தவாசி அருகே தெள்ளார் ஒன்றியத்தை சேர்ந்த டி.தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 42 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக மனோன்மணி என்பவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 3-ந் தேதி தெள்ளார் அருகே கொண்டையாங்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணியின் இடமாற்றத்தை கண்டித்தும், அவரை மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற உத்தரவு வழங்க வலியுறுத்தியும் கடந்த 6-ந் தேதி பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தெள்ளார் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் ராஜகோபால் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமரசம் செய்தார். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் அன்று மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்தனர். மறுநாள் 7-ந் தேதியும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் பள்ளியின் முன்பு அமர்ந்து பள்ளி தலைமை ஆசிரியையின் இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அந்த பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கும் சத்துணவு சமையல் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் ராஜகோபால், உதவி கல்வி அலுவலர் நேரு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளி தலைமை ஆசிரியை மருத்துவ விடுப்பில் இருக்கிறார். உங்களது கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, பகல் 11.30 மணி அளவில் பள்ளிக்கு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story