7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 28-ந்தேதி தாலுகா அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 28-ந்தேதி தாலுகா அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:45 PM GMT (Updated: 9 Aug 2018 9:33 PM GMT)

7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 28-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் நேரு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கோவிந்தசாமி, வட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணைத்தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட பொருளாளர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில செயலாளர் லட்சுமணன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக பர்கூர் வட்ட தலைவர் சத்தி, வட்ட பொருளாளர் சையத்முகமது ஆகியோர் பேசினர். முடிவில் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்க வேண்டும். ஜமாபந்தி படி வழங்க வேண்டும். இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்புபடி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டாக குறைத்து வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் கிராம உதவியாளர்களுக்கு கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.

இந்த 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற 11-ந்தேதி மாவட்ட அளவில் நடைபெறும் போராட்ட ஆயத்த விளக்க கூட்டத்தில் பங்கேற்பது. 28-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. வருகிற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அனைத்து ஊழியர்களும் தற்செயல் விடுப்பு ஒரு நாள் எடுத்து விடுப்பு கடிதம் கொடுப்பது. செப்டம்பர் 29-ந்தேதி மாவட்ட தலைநகரில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 

Next Story