வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை


வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2018 3:30 AM IST (Updated: 10 Aug 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி கமிஷனர் கூறினார்.

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை நகராட்சியில் முத்து வெங்கடேசன் கமிஷனராக இருந்து வந்தார். அவர் அருப்புக்கோட்டையில் தங்கி இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் ஒரு வருடத்துக்கும் மேலாக கமிஷனராக யாரும் நியமிக்கப் படாததால் நகராட்சி பொறியாளர்களே கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் புதிய கமிஷனராக சுரேஷ்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கேயம் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி தற்போது அருப்புக்கோட்டை நகராட்சியில் பொறுப்பேற்று உள்ளேன். இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்க பெறும் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கூடுதல் தண்ணீர் பெற்று வாரம் ஒரு முறை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முயற்சிப்பேன். நகரில் தூர்வாரப்படாத வாருகால்கள் சீரமைக்கப்படும். தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரமான நகராட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

அப்போது நகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, துணை பொறியாளர் காளஸ்வரி, மேலாளர் ஜெகதீஷ்வரி ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story