வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்


வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:15 PM GMT (Updated: 9 Aug 2018 10:15 PM GMT)

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் ஆன்லைனில் இனி நேரடியாக விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையத்தில் காத்திருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மதுரை, 


வருவாய்த்துறை மூலம் சாதி, வருமானம், வாரிசு சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில், இந்த சான்றிதழ்கள் அனைத்தும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தாசில்தார்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

எனவே தமிழக அரசு, இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தியது. அதிலும் பொதுமக்களின் பிரச்சினை தீரவில்லை. ஏனென்றால் இ-சேவை மையத்தில் பொதுமக்கள் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இ-சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் சொல்லப்பட்டது.

எனவே இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆன்லைனில் பொதுமக்களே நேரடியாக சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் முறையை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இனி இ-சேவை மையத்தில் காத்திருக்க வேண்டியதில்லை. கம்ப்யூட்டர் அல்லது செல்போனில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இ-சேவை மையத்தில் வருவாய்த்துறையால் வழங்கப்படும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பொதுமக்களே www.tnes-ev-ai.tn.gov.in/cit-iz-en/ என்ற இணையதளத்தில் 20-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வருமானம், இருப்பிடம், முதல்பட்டதாரி, கணவனால் கைவிடப்பட்டோர், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப இடப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ரூ.60 மட்டுமே. கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். மேலும் மத்திய அரசின் UM-A-NG என்ற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்களை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story