திருடிய மோட்டார் சைக்கிளை முகநூல் மூலம் விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது
திருடிய மோட்டார் சைக்கிளை முகநூல் மூலம் விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரை சேர்ந்தவர் தாவுத்அலி(வயது 30). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருவண்ணாமலை செட்டிப்பட்டை சேர்ந்த ரஞ்சித்குமார், வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த அபிஷேக் ஆகியோர் தங்களது முகநூல் பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் படத்தை போட்டு, இந்த மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டிருந்தனர். இதைபார்த்த தாவுத்அலியின் நண்பரான திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர், முகநூலில் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவர் ரஞ்சித்குமார், அபிஷேக் ஆகியோரை சந்தித்து விற்பனைக்காக உள்ள அந்த மோட்டார் சைக்கிளை பார்வையிட்டார். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் தாவுத்அலிக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதனால் உஷாரான அவர் ரஞ்சித்குமார், அபிஷேக் ஆகியோரை பிடித்து வைத்து கொண்டு தாவுத்அலிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தாவுத்அலி தனது நண்பர்கள் உதவியுடன் ரஞ்சித்குமார், அபிஷேக் ஆகியோரை பிடித்து அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரஞ்சித்குமார், அபிஷேக் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் ஒரு கார் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி முகநூல் மூலம் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. மேலும் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாவுத்அலிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடி சென்று விற்பனை செய்ய முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரஞ்சித்குமார், அபிஷேக் ஆகியோரை கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story