மாவட்ட செய்திகள்

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம் + "||" + Poor farmers are required to purchase paddy rice bags in the rainy season

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்
விருத்தாசலம் அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர். இவை நன்கு செழித்து வளர்ந்ததை அடுத்து, தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். மேலும் விருத்தாசலம் டேன்காப், ராஜேந்திரப்பட்டினம், சத்தியவாடி, பேரளையூர், ஆலிச்சிக்குடி, தொரவளூர், காவனூர், கொடுமனூர், தே.பவழங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும், நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீமுஷ்ணம் அருகே அக்ரஹாரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் திடீர் திடீரென பெய்யும் மழையில், நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. சில விவசாயிகள் எடுத்து வந்த நெல் மழையில் நனைந்து முளைக்கவே ஆரம்பித்து விட்டது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

இதே போல் தே.பவழங்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையத்துக்கு, விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை கொண்டு வந்தனர். ஆனால் அவை கொள்முதல் செய்யப்படாமல் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகிலேயே காத்து கிடக்கின்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்தன.

இந்த நிலையில் சில மூட்டைகளில் இருந்த நெல் முளைக்க ஆரம்பித்தது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு ஒன்று திரண்டு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நெல் மூட்டைகள் நனைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ஈரப்பதத்துடன் இருந்ததால், அதனை யாரும் கொள்முதல் செய்யவில்லை. இந்த நிலையில் அவை மழையில் நனைந்து முளைத்துவிட்டது. எனவே மழையில் நனைந்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து, உரிய விலை வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஓரிரு நாட்களுக்குள் நெல்கொள்முதல் செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.