ரூ.9,448 கோடி விவசாய கடன் தள்ளுபடி : கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்


ரூ.9,448 கோடி விவசாய கடன் தள்ளுபடி : கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 10 Aug 2018 5:14 AM IST (Updated: 10 Aug 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

முதல் கட்டமாக ரூ.9,448 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ரூ.48 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். இதுகுறித்து விவாதிக்க கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஜூலை 10-ந் தேதி வரை நடப்பு கணக்கு விவசாய கடனில் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். கடன் பெற்று விவசாயிகள் மரணம் அடைந்து இருந்தால் அவர்களின் வாரிசுதாரருக்கு இந்த பயன் கிடைக்கும். விவசாயிகள் கடனை முழுமையாக திரும்ப செலுத்தி இருந்தால் அத்தகைய விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த தள்ளுபடி தொகை வரவு வைக்கப்படும்.

அரசு ஊழியர்கள், கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பிற துறைகளில் மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த கடன் தள்ளுபடி திட்டம் பொருந்தாது. கடந்த 3 ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஆண்டு வருமான வரி செலுத்தி இருந்தால் அத்தகைய விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்காது.

விவசாய நிலங்கள், நகைகள், வாகனங்கள் வாங்கும் கடன், பசுந்தீவனம் வாங்கும் கடன், மீன் தொழிலுக்கு வாங்கும் கடன், சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடன்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. இந்த திட்டத்தால் 20.38 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். அதாவது முதல் கட்டமாக ரூ.9,448 கோடி தள்ளுபடி செய்ய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி செய்யும் தேசிய வங்கிகளுக்கு 4 தவணைகளில் அந்த தள்ளுபடி தொகையை அரசு சார்பில் செலுத்தப்படும். ஒரு ஆண்டிற்குள் கடன் தள்ளுபடி தொகை முழுவதும் தேசிய வங்கிகளுக்கு வழங்கப்படும். சுதந்திர தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கர்நாடக சிறையில் இருக்கும் 93 கைதிகளை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 

Next Story