தட்சிணகன்னடா, குடகு, சிக்கமகளூருவில் கனமழை : கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் மீண்டும் நிரம்பின


தட்சிணகன்னடா, குடகு, சிக்கமகளூருவில் கனமழை : கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் மீண்டும் நிரம்பின
x
தினத்தந்தி 10 Aug 2018 5:25 AM IST (Updated: 10 Aug 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

தட்சிணகன்னடா, குடகு, சிக்கமகளூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நேற்று மீண்டும் நிரம்பின.

தமிழகத்திற்கு காவிரியில் இரு அணைகளில் இருந்தும்  வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.  தொடங்கிய முதல் நாளிலேயே தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.

இதனால் மங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதேப்போல பெங்களூரு நகரம், புறநகர் உள்பட மாநிலம் முழுவதும் பருவமழை பெய்தது. இந்த பருவ மழையால் மாநிலத்தில் உள்ள அணைகள் முழுவதும் வேகமாக நிரம்பின.

இதேப்போன்று மலைநாடுகள் என்று வர்ணிக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்காவிலும் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த மாவட்டங்களில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிக்கமகளூரு, சிவமொக்காவில் பெய்த கனமழையால் துங்கா, பத்ரா ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரையையும் தொட்டப்படி தண்ணீர் சென்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சிக்கமகளூரு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. சிருங்கேரி, கொப்பா, மூடிகெரே, தரிகெரே ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. கலசாவில் பெய்த கனமழைக்கு பத்ரா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைமட்ட பாலம் மூழ்கியது. தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது முதல் இந்த தரைமட்ட பாலம் 8-வது தடையாக நேற்று மூழ்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிருங்கேரி அருகே கெரேகட்டே பகுதியில் மழைநீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. சிக்கமகளூரு டவுன் அரியப்பா தெருவை சேர்ந்த முகமது என்பவரின் வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிக்கமகளூரு மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) லட்சுமி பிரசாத் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் நின்று கொண்டு செல்போனில் செல்பி படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதுபோல் நேற்று காலை முதல் திடீரென தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. புத்தூர், பெல்தங்கடி, பண்ட்வால் உள்ளிட்ட தாலுகாக்களில் மழை கொட்டி தீர்த்தது. பண்ட்வால் பகுதியில் பெய்த கனமழைக்கு பல வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். புத்தூர் அருகே பெய்த கனமழையின் போது சுப்பிரமணியா கேட் பகுதியில் உள்ள ரெயில் நிலைய தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்தது.

இதனால் நேற்று உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் இருந்து மங்களூரு, ஹாசன், மைசூரு வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 16524), மற்றும் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து மங்களூரு, ஹாசன், மைசூரு வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ் பிரஸ் ரெயில்(வண்டி எண் 16518) ஆகிய 2 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. ரெயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதுபோல் குடகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காவிரி ஆற்றில் மீண்டும் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. தலைக்காவிரி, பாகமண்டலா, அய்யங்கேரி, நாபொக்லு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர் கனமழையால் மடிகேரி-மங்களூரு மலைப்பாதையில் மேக்கேரி என்னும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி சாலையை பயன்படுத்த கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. காபித்தோட்டங்கள், இஞ்சி பயிரிடப்பட்ட நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்துள்ளன. இதனால் மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை டவுன் பகுதிகளில் பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி உள்ளன. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடகு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் நேற்று குடகு மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணை ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,710 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 4,671 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283.07 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 41,692 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 44,054 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு அணைகளுக்கு வரும் நீரின் அளவு திடீரென்று அதிகரித்தது. இதனால் நேற்று மாலை கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் மீண்டும் முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. ஏற்கனவே கடந்த மாதம் (ஜூலை) 19-ந்தேதி இந்த இரு அணைகளும் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதுபோல் கபினி அணையின் நீர்வரத்து, வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

இரு அணைகளில் இருந்தும் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் காவிரியில் பாய்ந்தோடி ஒகேனக்கல் வழியாக மேட்டூர் நோக்கி செல்கிறது.

கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றிலும், கபினி அணையில் நீர் திறந்துவிடப்பட்டதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி, கபிலா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story