தாதா சோட்டா சகீலின் கூட்டாளி முன்னா சிங்கடாவை நாடு கடத்த தாய்லாந்து கோர்ட்டு அனுமதி


தாதா சோட்டா சகீலின் கூட்டாளி  முன்னா சிங்கடாவை நாடு கடத்த தாய்லாந்து கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 10 Aug 2018 12:02 AM GMT (Updated: 10 Aug 2018 12:02 AM GMT)

நிழல் உலக தாதா சோட்டா சகீலின் கூட்டாளி முன்னா சிங்கடாவை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர அனுமதி அளித்து தாய்லாந்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிமுக்கு இதன் மூலம் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

தாதா சோட்டா சகீலின் கூட்டாளிகளில் ஒருவர் முன்னா சிங்கடா. மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த இவர், கடந்த 2000-ம் ஆண்டில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் அறிவுறுத்தலின் பேரில் பாங்காக்கிற்கு சென்று அங்கு தலைமறைவாக இருந்த சோட்டா ராஜனை கொலை செய்யும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால் இவர் நடத்திய தாக்குதலில் இருந்து சோட்ட ராஜன் தப்பினார். அவரது கூட்டாளியான ரோகித் வெர்னா கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து சில காலம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த முன்னா சிங்கடா, 2001-ம் ஆண்டு தாய்லாந்திற்கு சென்றபோது அந்நாட்டு போலீசாரிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் பிடிபட்டார்.

தாய்லாந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்தியாவில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாலும், முக்கிய வழக்குகளில் இவர் சாட்சியாக இருப்பதாலும் அவரை நாடு கடத்தவேண்டும் என்று தாய்லாந்து அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்து வந்தது. இதேபோல் பாகிஸ்தான் அரசும் அவரை உரிமை கோரியது. இதுதொடர்பான வழக்கு தாய்லாந்து கோர்ட்டில் நடைபெற்றது.

இந்த நிலையில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரின் கைரேகை பதிவு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டி.என்.ஏ. மாதிரிகள் என அனைத்து சான்றுகளையும் தாய்லாந்து கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் இந்திய அரசின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த தாய்லாந்து கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முன்னா சிங்கடாவுக்கு ஒருமாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய தூதரகத்தினர் அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முன்னா சிங்கடா இந்தியா கொண்டு வரப்பட்டால், அது தாதா தாவூத் இப்ராகிமுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.

1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். முன்னா சிங்கடாவிடம் விசாரணை நடத்தும்போது, தாவூத் இப்ராகிமின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story