சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தொடங்கியது


சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 11 Aug 2018 3:30 AM IST (Updated: 11 Aug 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. கடைகள் வைத்திருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் 2015–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களே காரணமாக இருந்தது. நீதிமன்ற ஆணைகளின்படி நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி முழு மூச்சுடன் இறங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வீடுகள் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டன. அதன் தொடர்ச்சியாக கிழக்கு, மேற்கு, தெற்கு கூவம் சாலைகளில் ஆற்றங்கரையோரங்களில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். வேறு எதுவும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிந்தாதிரிப்பேட்டை டாம்ஸ் சாலையில் உள்ள ஆட்டோ ஒர்க்ஷாப், வெல்டிங், வாகனங்களுக்கு பெயிண்டிங் செய்யும் கடைகள் என மொத்தம் 300–க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை உரிமையாளர்களையே அகற்ற சொல்லி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முறையாக பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கி இருந்தது.

இருப்பினும், கடை உரிமையாளர்கள் அகற்றாமல் அதே இடத்தில் தொடர்ந்து அன்றாட வேலைகளை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. அதிகாரிகள் வருவதை அறிந்த கடை உரிமையாளர்கள் கடைகளில் இருந்த சாமான்களை வெளியில் எடுத்து வைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

அதுவரை காத்து இருந்த அதிகாரிகள் கடைகளில் இருந்த சாமான்கள் வெளியில் எடுக்கப்பட்டதும், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கட்டிடங்களை இடிக்க ஊழியர்களுக்கு உத்தரவு வழங்கினர். ஆக்கிரமிப்பு இடங்களில் கடைகள் வைத்து இருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு சிறப்பு முகாம் அங்கேயே நடத்தப்பட்டது. ஒரகடம் ஆப்பூரில் கடைகளுக்கான மாற்று இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஒரகடம் ஆப்பூரில் 350 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு 50 சதுர அடிக்கு கடை உரிமையாளர்கள் பணம் தந்தால் போதும். மீதமுள்ள 300 சதுர அடி இடத்துக்கு பணம் தரவேண்டிய அவசியம் இல்லை. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும்’ என்றனர்.

அங்குள்ள சில கடை உரிமையாளர்கள் கூறும்போது, ‘1968–ம் ஆண்டில் இருந்து இங்கு கடைகள் இருக்கிறது. தலைமுறை தாண்டி கடைகளை நடத்தி வருகிறோம். இங்கிருந்து ஆப்பூருக்கு செல்ல சொல்கிறார்கள். இதே வருமானம் அங்கு கிடைக்குமா? என்பதை சொல்ல முடியாது. இதற்கு மாற்று வழியை அரசாங்கம் ஏற்படுத்தி தரவேண்டும்’ என்றனர்.

Next Story