கருணாநிதி மறைவு: அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி


கருணாநிதி மறைவு: அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி
x
தினத்தந்தி 11 Aug 2018 4:45 AM IST (Updated: 11 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் சார்பில் திருவாரூரில் அமைதி பேரணி நடந்தது. இதில் 3 எம்.எல்.ஏக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவாரூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூரில் மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அவருடைய சொந்த ஊர் என்பதால் அவருடைய பிரிவை தாங்க முடியாமல் மக்கள் இறுக்கமான நிலையில் இருந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூரில் அனைத்து அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி, புகழ் அஞ்சலி கூட்டம் நடந்தது.

முன்னதாக ரெயில் நிலையத்தில் அமைதி பேரணி புறபட்டது. இதில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, பாரத் கேட்டரிங் கல்லூரி மாணவ, மாணவிகள், கட்சியினர், பொது நல அமைப்பினர் கலந்து கொண்டனர். பேரணி பஸ் நிலையம், கடைவீதி, நேதாஜி சாலை, கீழவீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள கருணாநிதியின் இல்லத்தை வந்து அடைந்தது. அங்கு அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து நடந்த புகழ் அஞ்சலி கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எம்.எல்.ஏ.க்கள் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன், கீழ்வேளூர் மதிவாணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் துரைவேலன், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பேட்டை சிவா, அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் உள்பட பலர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர். முடிவில் புகழ் அஞ்சலி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது மழை பெய்ய தொடங்கியது. கொட்டும் மழையில் நனைந்தபடி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Next Story