மாவட்ட செய்திகள்

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு + "||" + Special Temple worship in Amman temples at the end of Audi last Friday

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பெரம்பலூர், 


ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்திபெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று காலை முதலே கூட்டம், கூட்டமாக பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். மதியம் மதுரகாளியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டி கோவிலில் மாவு இடித்து, மாவிளக்கு செய்து வழிபாடு நடத்தினர். மேலும் தங்களுடைய வேண்டுதலை துண்டு சீட்டில் எழுதி கோவில் மரங்களில் கட்டி விட்டு சென்றனர். கோவில் முன்பு விளக்கு ஏற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள வாடா விளக்கில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றினர்.

கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் திங்கள், வெள்ளிக்கிழமைகள் தவிர அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று (சனிக்கிழமை) ஆடி அமாவாசை என்பதால் கோவில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் சுமந்தும் வேப்பூர் பெரிய ஏரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டது. அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் கோவில், எத்துராஜ் நகரில் சிங்கார தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், சேர்வைக்காரன் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக புறப்பட்டனர். காந்தி மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் வழியாக அவர்கள் கோவில்களுக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அரியலூர் மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் ஆவேரி கரையில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் புறப்பட்டனர். திருச்சி ரோடு, கடைவீதி, நான்கு ரோடு, தா.பழூர் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் செங்குந்தபுரம் மாரியம்மன், இலையூர் செல்லியம்மன், ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன், மேலக்குடியிருப்பு திரவுபதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.