மாவட்ட செய்திகள்

ஜாமீன் கேட்டவர் போலி சான்றிதழ் கொடுத்த விவகாரம்: தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் 16-ந் தேதி ஆஜராக வேண்டும் + "||" + Fake certificate given by the bail issue: The private hospital should be present in the doctor

ஜாமீன் கேட்டவர் போலி சான்றிதழ் கொடுத்த விவகாரம்: தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் 16-ந் தேதி ஆஜராக வேண்டும்

ஜாமீன் கேட்டவர் போலி சான்றிதழ் கொடுத்த விவகாரம்: தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் 16-ந் தேதி ஆஜராக வேண்டும்
ஜாமீன் கேட்டவர் போலி சான்றிதழ் கொடுத்தது தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் 16-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போதை ஊசிகள் மற்றும் மருந்துகளை கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்தது தொடர்பாக கோவையை சேர்ந்த அப்துல் ரகுமான், முகமது சிஹாப் (வயது 22), அந்த கும்பலின் தலைவனான பெங்களூருவை சேர்ந்த ஜாய் இம்மானுவேல் உள்பட 8 பேரை கோவை காட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


இந்த நிலையில் முகமதுசிஹாப் ஜாமீன் கேட்டு கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் சிகிச்சை பெற வேண்டும் என்றும், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத் தில் தனக்கு ஆகஸ்டு 25-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த ஜாமீன் மனு உடன், தனது திருமண அழைப்பிதழ் மற்றும் அவருடைய உடல்நிலை குறித்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக் டர்கள் கொடுத்த சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட்டு இருந்தது. விசாரணையின் போது, முகமதுசிஹாப் இணைத்து இருந்த மருத்துவ சான்றிதழ் மீது நீதிபதி சஞ்சய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் கொடுத்த சான்றிதழை சரிபார்ப்பதற்காக அந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அந்த ஆஸ்பத்திரி டாக்டர் ராமகிருஷ்ணன், நான் எந்த சான்றிதழும் கொடுக்க வில்லை என்று பதில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கொடுத்த சான்றிதழ் சரிதானா? என்பதை சரிபார்க்க அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அது தொடர்பாக கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில் அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கடந்த 6-ந் தேதி கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், அரசு டாக்டர் மன்சூர் கொடுத்த சான்றிதழின் பேரில் அரசு டாக்டர் உஷா சான்றிதழ் கொடுத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அரசு டாக்டர் மன்சூரிடம் விசார ணை நடத்தி 10-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டீனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் நேற்று காலையில் கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தார். அதை வாங்கி பார்த்த நீதிபதி சஞ்சய், இந்த சான்றிதழ் தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவர் வருகிற 16-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதுபோன்று முகமது சிஹாப்புக்கு உண்மையிலேயே வருகிற 25-ந் தேதி திருமணம் நடைபெறுகிறதா என்பதை விசாரிக்க அவருடைய தந்தை மற்றும் சகோதரரை 16-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அத்துடன் உடுமலையில் உள்ள திருமண மண்டபத்தில் உண்மையாகவே திருமணம் நடை பெறுகிறதா? என்பதை விசாரித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.