நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழாவையொட்டி தபால்தலை வெளியிட வேண்டும்


நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழாவையொட்டி தபால்தலை வெளியிட வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2018 11:00 PM GMT (Updated: 10 Aug 2018 10:02 PM GMT)

நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழாவையொட்டி தபால்தலை வெளியிட வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஊட்டி,

கடந்த 1868-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தை தனியாக சென்னை மாகாண ஆங்கிலேய அரசு பிரித்தது. நீலகிரி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்தும், கடந்த 1818-ம் ஆண்டு ஜான் சலீவன் நீலகிரி மாவட்டத்தை கண்டறிந்து 200 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்தும் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வருகிற 18-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாகவும், சுற்றுச் சூழல் மாவட்டமாகவும் இருப்பதால், பாரம்பரிய மாவட்டமாக அறிவித்து இந்தியா முழுவதும் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழாவில் கலெக்டர் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் முதல் கலெக்டராகவும், ஆணையாளராகவும் இருந்த பிரிக்சை நினைவு கூறும் வகையில், ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் மாணவர்கள் கலந்துகொள்ளும் பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தபால் தலை வெளியிட வேண்டும். பழங்குடியின மக்களின் கலாசார பாரம்பரிய நடனங்கள் இடம்பெற செய்து சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஊட்டி அழகு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சோபனா பேசும்போது, நீலகிரியின் பாரம்பரியம் குறித்த குறும்படம் கலெக்டர் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்கில் திரையிட அனுமதிக்க வேண்டும். நீலகிரி குறித்த புகைப்பட கண்காட்சி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 150 ஆண்டுகள் நிறைவு விழாவுக்கான ஒரு சின்னத்தை (லோகோ) அறிவிக்க வேண்டும். வெலிங்டன் ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்தியம் இடம் பெற வேண்டும் என்றார். மக்கள் வழிகாட்டி இயக்கத்தை சேர்ந்த சந்திரன் ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் விழாவின் போது விளம்பரப்படுத்த வேண்டும். 18-ந் தேதியன்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய பழங்கால கார்கள் அணிவகுப்பு ஊட்டியில் நடத்த வேண்டும் என்றார்.

மேற்கண்ட கருத்துகள், ஆலோசனைகளை கேட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, இதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று கூறினார். 

Next Story