பரமக்குடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு


பரமக்குடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Aug 2018 4:15 AM IST (Updated: 11 Aug 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக அவர் கமுதக்குடி கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து வெங்காளூர் மற்றும் சங்கன்கோட்டை கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்்ச்சி மற்றும் சரியான எடை குறித்தும், சராசரி அளவை விட மிக குறைவான எடையளவு உள்ள குழந்தைகளை கண்டறியும்பட்சத்தில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், சமுதாய கூட கட்டிடங்களை ஆய்வு செய்து அதிலுள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொண்ட அவர், கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றுவர வசதியாக ஒரு பாலம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் கோரிக்கை வைத்தனர்.

அதை கேட்டறிந்த கலெக்டர் நடராஜன் சாலையைப் பொறுத்தவரை சங்கன்கோட்டையில் இருந்து நண்டுபட்டி சாலை அமைக்க ரூ.1.21 கோடி மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு 2 சாலைகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல குடிநீரை பொறுத்தவரை நிலத்தடிநீர் உப்பாக உள்ளபடியால் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளி குழந்தைகள் செல்வதற்கான பாலம் தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story