தனியார் நிதி நிறுவன ஊழியர்களை வழிமறித்து ரூ.3 லட்சம் பறிப்பு
திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை வழிமறித்து ரூ.3 லட்சத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திண்டிவனம்,
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனாரப்பன் மகன் இளையராஜா(வயது 28). திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் அகூரை சேர்ந்த குப்பன்(32) என்பவர் உள்ளிட்ட 4 பேருடன் திண்டிவனம் மல்லி பத்தர் தெருவில் வீடு ஒன்றை வாடைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இளையராஜா, குப்பன் ஆகியோர் நிதி நிறுவனத்தில் வசூலான தொகை ரூ.2லட்சத்து 96 ஆயிரத்து 930-ஐ பையில் போட்டு எடுத்துக்கொண்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை குப்பன் ஓட்டினார்.
இளையராஜா பணப்பையுடன் பின்னால் அமர்ந்திருந்தார். மல்லி பத்தர் தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென குப்பன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது தங்களுடைய மோட்டார் சைக்கிளை மோதி, அவர்களை வழிமறித்து, இளையராஜா கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிந்து, தனியார் நிதி நிறுவன ஊழியர்களை வழிமறித்து பணப்பையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story