மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலியை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The killer was killed and the businessman committed suicide

கள்ளக்காதலியை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்காதலியை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காசாநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 65). இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. பொன்னுச்சாமி துடைப்பம் தயாரித்து விற்று வந்தார். இவருக்கும், வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த செல்லமுத்து மனைவி ஈஸ்வரி (48) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈஸ்வரி, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரை காசாநகரில் தனது வீட்டுக்கு எதிரே வாடகை வீட்டில் பொன்னுச்சாமி தங்க வைத்திருந்தார். பொன்னுச்சாமி மது குடித்துவிட்டு ஈஸ்வரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஈஸ்வரி தன்னை பார்க்க வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரியை பொன்னுச்சாமி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் ஈஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க பொன்னுச்சாமி திண்டுக்கல் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். அதன்படி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் 30 நாட்கள் கையெழுத்து போட்டு வந்தார்.

அதன்பிறகும் ஈஸ்வரி வீட்டுக்கு சென்று பொன்னுச்சாமி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னுச்சாமி, மதுபோதையில் ஈஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் ஈஸ்வரி தூங்கச் சென்றார். நள்ளிரவு நேரத்தில் பொன்னுச்சாமி அவர் வீட்டுக்கு சென்று தூங்கி கொண்டிருந்த ஈஸ்வரியின் தலையில் கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அதன்பிறகு பொன்னுச்சாமி தனது வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் பொன்னுச்சாமி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.