மாவட்ட செய்திகள்

சிவகாசியில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகம் + "||" + In Sivakasi Drinking water in a muddy state

சிவகாசியில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகம்

சிவகாசியில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகம்
சிவகாசியில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகாசி,

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி சார்பில் சுழற்சி முறையில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேடான பகுதிகளுக்கு மட்டும் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குழாய் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கிய நிலையில் குடிக்க பயன்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாக பெண்கள் புகார் கூறி வருகிறார்கள்.


நேற்று காலை பராசக்தி காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் கலங்கிய நிலையில் வந்த குடிநீரை பிடித்த பெண்கள் இதை குடிக்க பயன் படுத்த முடியாது என்று கூறி அந்த பகுதியில் உள்ள முன்னாள் கவுன்சிலர் முருகானந்தத்திடம் புகார் கூறினர். அவர் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி தரமானதாக குடிநீர் வினியோகம் செய்ய கேட்டுக்கொள்வதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

சிவகாசிக்கு மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்தும், வெம்பக்கோட்டை அணையில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 2½ அடிக்கு சென்று விட்டது. இதனால் அங்கு இருந்து பெறப்படும் தண்ணீர்சகதியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு பெறப் படும் தண்ணீர் உரிய முறையில் சுத்தம் செய்து தான் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது என்றும், இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் அவர் விளக்கினார்.

சிவகாசி பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஆழ்துளை கிணறுகளில் பல நாட்களாக போதிய தண்ணீர் இல்லாமல் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் பெற பெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நகராட்சி சார்பில் வினியோகிக்கும் குடிநீர் குடிக்க லாயக்கற்ற வகையில் இருப்பது பொதுமக்களை மேலும் சிரமப்படுத்துகிறது. எனவே தண்ணீரை சுத்தம் செய்து குடிக்க தகுதியான தண்ணீராக வழங்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகும்.