மனைவி, உறவினர்களுடன் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயற்சி


மனைவி, உறவினர்களுடன் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 Aug 2018 4:10 AM IST (Updated: 11 Aug 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

வைப்புத்தொகை வழங்காததால் அகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மனைவி, உறவினர்களுடன் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாடிக்கொம்பு,


திண்டுக்கல் அருகே உள்ள அகரம் பேரூராட்சி சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உலகம்பட்டி, ரெங்கப்பனூர், அகரம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பாலங்கள் கட்டப்பட்டன. இதில், உலகம்பட்டி அருகே சந்தனவர்த்தினி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்த முத்துக்கிளி என்பவர் ஒப்பந்தம் எடுத்து பாலம் கட்டி முடித்தார்.

இதற்கான பணம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் வைப்புத்தொகையாக அவர் பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்திய ரூ.4 லட்சத்து 59 ஆயிரத்தை கொடுக்கவில்லை. கட்டிடப்பணிகள் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகியும் வைப்புத்தொகை வழங்காததால் பேரூராட்சி அலுவலர் ரவிசங்கரிடம் இதுபற்றி முத்துக்கிளி கேட்டார். அதன்படி கடந்த வாரம் வைப்புத்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

தற்போது பேரூராட்சியில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால், மீதமுள்ள தொகையை அடுத்த வாரம் தருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த முத்துக்கிளி தனது மனைவி பார்வதி மற்றும் உறவினர்கள் 3 பேருடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் நேற்று மதியம் வந்தார்.

திடீரென அவர்கள் 5 பேரும் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போலீசார், முத்துக்கிளியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறும்போது, முத்துக்கிளி செய்த பாலம் கட்டும் பணிக்கு இந்த ஆண்டு தான் தணிக்கை துறையின் தணிக்கை முடிந்தது. அதன் அடிப்படையில் அவருக்கு வழங்க வேண்டிய வைப்புத்தொகையில் ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள தொகையான ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்தை பேரூராட்சியின் நிதிநிலை சீரானதும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story