சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்கு அதிரடிப்படை வீரர்கள்


சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்கு அதிரடிப்படை வீரர்கள்
x
தினத்தந்தி 11 Aug 2018 4:12 AM IST (Updated: 11 Aug 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு அதிரடிப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் ஆடிஅமாவாசையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலுக்கு விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை, மதுரை மாவட்டம் வாளைதோப்பு, தேனி மாவட்டம் உப்புத்துறை ஆகிய பாதைகள் வழியாக இதுவரை சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சென்று வழிபட்டு உள்ளனர்.

முக்கிய நாளான இன்று(சனிக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலையில் குங்குமம், பன்னீர், இளநீர், தேன், மஞ் சள், திரவியப்பொடிஉள்ளிட்ட 18 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.

முக்கிய நாளான இன்று கோவிலுக்கு விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும்,அடிப்படை வசதிகளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் குழு தாணிப்பாறை மற்றும் மலை பாதைகளை ஆய்வு செய்தனர்.அதன்பேரில் பயிற்சி பெற்ற அதிரடிப்படை வீரர்கள் 40 பேர்,பயிற்சியில் உள்ள போலீஸ்சூப்பிரண்டுகள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையில் போலீசார் வழுக்குபாறை, கோணதளைவாசல், ரெட்டலிங்கம், பிலாவடி கருப்பசாமி, குளிராட்டி,கொய்யாதோப்பு, காத்தாடி மலை ஆகிய இடங்களில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.இவர்கள் பக்தர்கள் பாதுகாப்பிற்கும்,எந்த ஒரு இயற்கை பேரிடர்களை சமாளிப்பதற்கும் தயாரான நிலையில் உள்ளனர்.இவர்களிடம் கயிறுகள், டார்ச் லைட்டுகள்,பேட்டரிகள்,தொலை தொடர்பு வசதிகள் ஆகியவைகள் உள்ளது. இன்று ஆடிஅமாவாசை என்பதால் மிகவும் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story