சதுரகிரி மகாலிங்கம் கோவில் திருவிழா: தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதி
சதுரகிரி மகாலிங்கம் கோவில் திருவிழாவிற்கு தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் உப்புத்துறை அருகே விருதுநகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. உப்புத்துறை யானைகஜம் வனப்பகுதி வழியாக இந்த கோவிலுக்கு செல்ல பாதை அமைந்துள்ளது. வருடம் தோறும் ஆடி அமாவாசை நாட்களில் சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவின் போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருவார்கள். பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சின்னமனூர், தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) ஆடி அமாவாசை என்பதால் நேற்று முதல் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர். இதையொட்டி முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் உப்புத்துறை கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கை, போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல மலைப்பகுதிக்கு பாலித்தீன் பைகள் மற்றும் தீ விபத்து ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் எடுத்து செல்ல தடை உள்ளதால் நேற்று முதல் வருசநாடு மற்றும் சாப்டூர் வனத்துறையினர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து பாலித்தீன் பைகள், பீடி, தீப்பெட்டி, பத்தி, சூடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குடிநீர் கேன்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளதால் மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுதவிர கோவிலுக்கு செல்லும் மற்றும் தரிசனம் முடித்து திரும்பி வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
மேகமலை உதவி வனப்பாதுகாவலர் புவனேஷ், வருசநாடு வனச்சரகர் இக்பால் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று உப்புத்துறை கிராமத்துக்கு சென்று பணிகளை பார்வையிட்டனர். மேலும் மலைப்பாதையில் கூட்டமாக செல்ல வேண்டும், வேறு பாதையில் செல்ல கூடாது என பக்தர்களை அறிவுறுத்தி அனுப்பினர்.
Related Tags :
Next Story