அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி


அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 10 Aug 2018 10:48 PM GMT (Updated: 10 Aug 2018 10:48 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு தேவையான 8,200 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 4,960 கட்டுப்பாட்டு எந்திரங்களும் கொண்டு வரப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாவட்டத்திற்கு விரைவில் 4,960 விவிபேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் கருவி) எந்திரங்களும் கொண்டுவரப்பட உள்ளது.

இந்தநிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க் ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், அ.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.ஜனதா கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணிகள் தொடங்கியது.

இந்த முதல்நிலை சரிபார்ப்பு பணியில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் இயற்பொருள், தொழில்நுட்ப மற்றும் இயல்பான செயல்திறன் குறித்து ஆராய்ந்து சரிபார்ப்புபணி நடத்தப்பட உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள குறைபாடுகள் என்ன? என்பது பற்றி அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு கலெக்டர் ரோகிணி விளக்கம் அளித்தார். வாக்குப்பதிவு எந்திரங்களை பெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், வாக்குப்பதிவு எந்திரத்தின் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை சரிபார்த்து வருகின்றனர்.

இந்த முதல்நிலை சரிபார்ப்பு பணியில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் இயற்பொருள், தொழில்நுட்ப மற்றும் இயல்பான செயல்திறன் குறித்து ஆராய்ந்து சரிபார்ப்புபணி நடத்தப்பட உள்ளது. எந்திரங்களை தூய்மை செய்வதோடு, எந்திரத்தின் செயல்திறன் குறித்து அனைத்து பொத்தான்கள், இணைப்பான்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? என சோதித்து அறிந்து உறுதி செய்து வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story