நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 60 அடியை எட்டிய வைகை அணை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வைகை அணை மற்றும் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும், மதுரை மாவட்ட விவசாயத்துக்காகவும் வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் நீர்வரத்து இருந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,465 கனஅடியாக அதிகரித்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 59.51 அடியாக உயர்ந்தது.
பிற்பகலில் 60 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த நீர் இருப்பு 3,513 மில்லியன் கனஅடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளதால் அணையின் பிரதான மதகுகளில் தண்ணீர் கசிய தொடங்கியுள்ளது. இதே நீர்வரத்து தொடரும் பட்சத்தில் விரைவில் வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story