மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவிகள்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவிகள்
x
தினத்தந்தி 10 Aug 2018 10:57 PM GMT (Updated: 10 Aug 2018 10:57 PM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டுவதற்கான புதிய கருவி பொருத்தப்பட உள்ளது. இதற்காக இந்த கருவிகள் பெங்களூருவில் இருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்டன.


தேனி, 



தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பெருத்த சர்ச்சைக்குள்ளாகியது. உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கூறப்படுவதை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்தது.

இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையின் போது, 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவை சரிபார்க்க நவீன கருவி பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன், தாங்கள் விரும்பிய சின்னத்துக்கு வாக்கு பதிவாகி உள்ளதா என வாக்காளர்கள் சரிபார்க்கும் காகிதப்பதிவு முறை கருவிகள் வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி சோதனை முயற்சியாக சில மாநிலங்களில் நடந்த தேர்தலில் இந்த கருவி பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் இந்த கருவிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் பொருத்தப்பட உள்ளது.

இதற்காக பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட இந்த கருவிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெங்களூருவில் இருந்து தேனிக்கு இந்த நவீன கருவிகள் நேற்று பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு என்று முதற்கட்டமாக 1,620 கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்காக இந்த அறை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
பின்னர் இந்த அறையில் கருவிகளை வைத்துவிட்டு அறைக்கு பூட்டுபோட்டு சீல் வைக்கப்பட்டது. 

Next Story