விளம்பர கொள்கையை வகுப்பதில் காலதாமதம் ஏன்? கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி


விளம்பர கொள்கையை வகுப்பதில் காலதாமதம் ஏன்? கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 Aug 2018 5:15 AM IST (Updated: 11 Aug 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

விளம்பர கொள்கையை வகுப்பதில் காலதாமதம் ஏன்? என்று பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை அகற்ற உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விளம்பர பலகைகளை முறைப்படுத்த ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஆஜரான மாநகராட்சி வக்கீல், இன்னும் விளம்பர கொள்கையை வகுக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் அவர்கள் பேசுகையில், “விளம்பர கொள்கையை வகுக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளின் பெயர்களை தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் தங்களின் பணியை உணர்ந்து செயல்பட வேண்டும். சம்பளம், படி போன்ற விஷயங்களில் மட்டும் பொதுச் சேவை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

பணி என்று வரும்போது அதிகாரிகள் அதை மறந்துவிடுகிறார்கள். நகரின் அழகை பாதுகாப்பது, மாநகராட்சிக்கு இழப்பை தடுக்கும் விஷயத்தில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். விளம்பர பேனர்களை தடுப்பதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத பேனர்கள் வைத்தது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் யாருடைய பெயரையும் குறிப்பிடாதது ஏன்?“ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பிறகு வழக்கு விசாரணையை உணவு இடைவேளைக்கு பிறகு ஒத்திவைத்தனர். அதன்படி உணவு இடைவேளைக்கு பிறகு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்றது. அப்போது அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் உதய்ஹொல்லா ஆஜரானார். அப்போது மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்தும் கோர்ட்டில் இருந்தார்.

அப்போது வாதாடிய அட்வகேட் ஜெனரல், “உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக 223 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை“ என்றார்.

அப்போது நீதிபதிகள், “இந்த 223 வழக்குகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் போடப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதிக்குள் இந்த 223 வழக்குகளின் நிலை குறித்து இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். பேனர்களை அகற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிக தீவிரமான குற்றம். தாக்குதல் நடத்துபவர்கள் ஆட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருக்கிறார்கள். இந்த 223 வழக்குகளின் விசாரணையை கீழ்கோர்ட்டு தினமும் நடத்தி விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும்“ என்றனர். 

Next Story