திபெத் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயார் - குமாரசாமி பேச்சு


திபெத் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயார் - குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2018 12:09 AM GMT (Updated: 11 Aug 2018 12:09 AM GMT)

திபெத் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளதாக குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

திபெத் அமைப்பு சார்பில் ‘நன்றி கர்நாடகம்‘ என்ற நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, புத்தமத தலைவர் தலாய்லாமா மற்றும் திபெத் மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிஜலிங்கப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது திபெத்திய மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது. திபெத் மக்களுடன் கன்னடர்கள் நல்லிணக்கத்துடன் இருக்கிறார்கள். இந்த நல்லிணக்க உறவு இப்படியே தொடர்ந்து இருக்க வேண்டும். கன்னடர்களுடன் கலந்து திபெத் மக்கள் வசித்து வருகிறார்கள்.

மைசூரு, கார்வார், சாம்ராஜ்நகர், குடகு மாவட்டங்களில் திபெத் மக்கள் வசித்து வருகிறார்கள். கர்நாடகத்தின் வளர்ச்சியிலும் திபெத் மக்கள் பங்களிப்பு கொடுத்துள்ளனர். திபெத் மக்களுக்கு தங்களுக்கே உரிய கலாசாரம், பண்பாடு இருக்கின்றன.

இந்தியாவுடனான திபெத் உறவு நன்றாக உள்ளது. திபெத் மக்களுக்கு தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. தேவைப்பட்டால் திபெத் மக்களுக்கு இன்னும் வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இதையடுத்து விழாவில் கலந்துகொண்ட குமாரசாமிக்கு, தலாய்லாமா நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த குமாரசாமிக்கு, திபெத் பெண்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். 

Next Story