பொதுமக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்
சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும், குற்றத்தடுப்பு சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டது.
இந்த குறும்படத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நடித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு குறும்படத்திற்கான குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறுந்தகடை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 1,000 கி.மீ. தூரம் உள்ளது. வடக்கு, தென் மாவட்டங்களை இணைக்கக்கூடிய வகையில் உள்ள விழுப்புரம் வழியாகத் தான் பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. மாதத்திற்கு சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விழுப்புரம் மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இதனாலேயே இங்கு சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 915 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து ‘பேரிகார்டு’ வைத்தல், அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களில் போலீசார் பணியில் இருந்து மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க செய்தல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தி பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் விளைவாக கடந்த 2017-ம் ஆண்டில் விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 834 ஆக குறைந்துள்ளது. விபத்துகளை தடுக்க பொதுமக்களிடம் போலீசார், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முதலில் போலீசார் வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட், ஷீட்பெல்ட் அணிந்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். போலீசாரை பார்த்து, மக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள். விபத்துகளை தடுக்க காவல்துறையினரால் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அந்தளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜன், ராபின்சன், சுரேஷ்பாபு, அப்பாண்டைராஜ், குறும்பட தயாரிப்பாளர் வெள்ளையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story