அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு


அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2018 4:33 AM GMT (Updated: 11 Aug 2018 4:33 AM GMT)

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த வேண்டும் என கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, 

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த வேண்டும் என கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட அனுமதியற்ற வீட்டுமனைகளை நகர் ஊரமைப்பு துறையின் சார்நிலை அலுவலகங்களில் வரன்முறைப்படுத்த கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.

தனிமனைகளை விரைந்து வரன்முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு முதல்கட்டமாக பாளையங்கோட்டை மற்றும் மானூர் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வரிதண்டலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சென்ட்டுக்கு கட்டணம்

ஒரு சென்ட் நிலத்துக்கு மாநகராட்சி பகுதியில் ரூ.24 ஆயிரத்து 300, சிறப்பு மற்றும் தேர்வுநிலை நகரசபை பகுதிகள் ரூ.12 ஆயிரத்து 550, நிலை-1 மற்றும் நிலை- 2 நகராட்சி பகுதிகளில் ரூ.8,500, நகரப் பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.4 ஆயிரத்து 250, கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள வீடுகள், தனி வீட்டுமனைகள் ரூ.2 ஆயிரத்து 220 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வரன்முறைப்படுத்த வேண்டும்

வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதிக்குள் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த வேண்டும். அப்படியில்லையென்றால் அந்த வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரன்முறைபடுத்தாத வீடுகளின் மின்சாரம், தண்ணீர், வடிகால் மற்றும் கழிவுநீர் ஓடை இணைப்பு ஆகியவைகள் நீட்டித்து வழங்கப்பட மாட்டாது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), முத்து இளங்கோ, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கல்யாண சுந்தரம், மண்டல உள்ளூர் திட்ட குழும இயக்குனர் நாகராஜன், உள்ளூர் திட்ட குழு செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story