பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு குற்றாலம் அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை


பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு குற்றாலம் அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை
x
தினத்தந்தி 11 Aug 2018 4:48 AM GMT (Updated: 11 Aug 2018 4:48 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாபநாசம்-சேர்வலாறு

கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்தவாறு இருக்கிறது. நேற்று முன்தினம் 112.25 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 114.20 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,868 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 508 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 123.23 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 130.44 அடியாக உள்ளது.

இதேபோல் மணிமுத்தாறு கடனா, ராமநதி, கருப்பாநதி குண்டாறு, அடவிநயினார்கோவில், கொடுமுடியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

குற்றாலத்தில் குளிக்க தடை

குற்றாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியிலும் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து நேற்று 3-வது நாளாகவும் வெள்ளப்பெருக்கால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. நெல்லை பகுதியில் வானம் மேக மூட்டாக காட்சி அளித்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம் -3, சேர்வலாறு -3, மணிமுத்தாறு -1.4, கடனா-2, ராமநதி-8, கருப்பாநதி-3, குண்டாறு-74, நம்பியாறு -7, அடவிநயினார்-30, ஆய்குடி-6.4, கல்லிடைக்குறிச்சி-1, செங்கோட்டை-43, சிவகிரி-1, தென்காசி-17.

Next Story