குற்றம் குறைய சட்டம் கற்போம்!


குற்றம் குறைய சட்டம் கற்போம்!
x
தினத்தந்தி 11 Aug 2018 8:01 AM GMT (Updated: 11 Aug 2018 8:01 AM GMT)

நம் அன்றாட வாழ்வில், சட்டம் என்பது ஒரு இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது.

நம்மில் எத்தனை பேருக்கு சட்டம் பற்றிய புரிதலும், அறிவும் இருக்கிறது? ஒரு மனிதனுக்கு மட்டும் சட்டம் பற்றிய அறிவு இருந்தால், அவனை யாராலும் அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. ஆனால் நம் நாட்டில் சட்டத்துறையில் பணிபுரிபவர்களைத் தவிர்த்து, மற்றவர்களில் நூற்றில் 10 பேருக்கு மட்டுமே சட்டத்தை பற்றிய அடிப்படை அறிவு இருக்கிறது.

சட்டத்தின் முக்கிய நெறி மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக இருந்தாலும், அதன் மற்றொரு முக்கிய நெறி ஒரு மனிதனை மற்றவர்களிடம் இருந்து பார்த்துக் கொள்வதுமே ஆகும். ஆனால், இதை மக்கள் உணர்ந்திருந்தால், இன்று நம் நாட்டில் 90 சதவீத மக்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருந்திருக்கும். இந்நிலை நம் மக்களிடம் மாற வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும், சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு நேரம் என்று சிறிது நேரம் ஒதுக்கலாம். நம் நாட்டுக் குடிமகன்கள் அனைவரும் தங்களைப் பாதுகாக்கும் அடிப்படைச் சட்டங்களைப் பற்றிய பொது அறிவை பெற்றுவிட்டால், அனைவரும் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஏமாற்றப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள். குற்றங்களும் பன்மடங்கு குறைந்துவிடும். சட்டத்தை வெறும் பாடமாக மட்டும் கற்காமல் அதை நம் வாழ்வோடு ஒன்றிய ஒரு பட்டறிவாக தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

என்னதான் நம் நாட்டில் குழந்தைகளையும், முதியவர்களையும் பாதுகாக்க பல சட்டங்கள் இருந்தாலும், அவற்றை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே அவை அவர்களுக்கு உதவும். அதுவரை அவை பயனற்றவையே.

அதுபோலவே, உலகிலேயே நீதித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருந்தாலும், உலகிலேயே அதிக சட்டங்களை வைத்து அமைக்கப்பட்ட நீளமான அரசியல் அமைப்பு சாசனம் என்ற பெருமையை பெற்றிருந்தாலும், நம் நாட்டு மக்கள் ஆர்வத்துடன் சட்டத்தைப் பற்றிய பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளாத வரை, அவர்களால் சட்டத்தைப் பயன்படுத்தி முழுமையாக பலன் அடைய முடியாது.

சட்டம் படித்தவர்கள் என்றாலே மற்றவர்கள் அவர்களிடம் சற்று யோசித்துத் தெளிவாக பேச வேண்டும் என்று எண்ணுவார்கள். ஏனென்றால் சட்டம் படித்த ஒருவர் நினைத்தால் மட்டுமே தான் தவறு செய்யாத நல்லவர்களுக்கு நீதியையும், தவறு செய்வர்களுக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தர முடியும்.

நம் இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பில் 511 பிரிவுகளும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 448 ஷரத்துகளும், உரிமையியல் நடைமுறை விதித்தொகுப்பில் 158 பகுதிகளும், 51 விதிமுறைகளும், குற்றவியல் நடைமுறை சட்டத்தொகுப்பில் 484 பகுதிகளும், இந்திய சாட்சியச் சட்டத்தில் 167 பிரிவுகளும் உள்ளன.

சட்டம் படிப்பவர்களுக்கு இவை அனைத்தையும் பற்றிய அறிவு விரல் நுனியில் இருக்க வேண்டும். பொதுமக்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், ஒரு சில முக்கிய பிரிவுகளையும், மனித உரிமைகளையும் பற்றிய பொது அறிவு இருந்தால் போதுமானது.

அதே போல, ஒரு சிறந்த சட்ட வல்லுனருக்கு வழக்கை வெல்வது, தோற்பது என்பதை விட அவரின் நேர்மையும், கட்சிக்காரர்களிடமும் நீதிபதிகளிடமும் காட்டும் பணிவிலும், அன்பிலும் தான் அவரை மற்ற வழக்கறிஞர்களுக்கு எடுத்துக் காட்டாக உயர்த்திப் பேச வைக்கிறது. ஒருவர் எப்போது வெற்றிப் பெறுகிறார் என்பதை விட எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே முக்கியம்.

ஆனால், வக்கீலாகவோ, நீதிபதிகளாகவோ வாழ்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. தங்களுக்கு சொந்த பிரச்சினைகள் ஆயிரம் இருந்தாலும், மற்றவர்களின் பிரச்சினையை கேட்டு அவர்களுக்கு சரியான தீர்வை பெற்று கொடுப்பது எளிதல்ல. இவர்கள் இருவருமே பிறருக்கு சேவை செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள்.

சட்டம் என்பது மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொரு நாட்டின் குடிமகன்களும் நாட்டின் அனைத்துச் சட்டங்களைப் பற்றிய பொது அறிவை பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதது. சாமானியனும் சட்டம் கற்றால் நிச்சயம் குற்றம் குறையும்.

ஒரு நாட்டு மக்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் அந்த நாட்டில் குற்றங்கள் குறைந்து, நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒற்றுமை மேலோங்கும். அந்த பாதுகாப்பு உணர்வே உலக நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். அவ்வாறு அனைத்து நாட்டு மக்களிடையே ஒற்றுமை வந்து விட்டால், உலக அமைதி உண்டாகும் என்று கூறியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்.

அவரின் கனவை நனவாக்குவது நம் இளைஞர்களின் கடமை. எனவே, குற்றங்கள் குறைய சட்டம் கற்போம். 

-ப.யுவஸ்ரீ, சட்டக்கல்லூரி மாணவி, சென்னை

Next Story