இளைஞர்களுக்கு எந்தமாதிரி ஊக்கம் தேவை?


இளைஞர்களுக்கு எந்தமாதிரி ஊக்கம் தேவை?
x
தினத்தந்தி 11 Aug 2018 8:41 AM GMT (Updated: 11 Aug 2018 8:41 AM GMT)

உலகிலுள்ள எல்லா மனிதர்களும் மனிதநலன் குறித்த அக்கறையோடுதான் உள்ளனர். குற்றவாளியோ, திருடனோ, யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அவர்களும் மனிதநலனில்தான் அக்கறையோடு உள்ளனர்.

னிதநலன் குறித்த அவர்களது கருத்தின்படி, அது அவர்களைப் பற்றி மட்டும்தான். ஒரு குற்றவாளியும் மனிதநலனில் அக்கறை உள்ளவன் தான். ஆனால், அவனைப் பொறுத்தவரையில் மனிதநலன் என்பது அவனைப் பற்றியது மட்டுமே.

ஒரு சிலருக்கு மனிதநலன் என்பது அவரும் அவரது குடும்பமும் குறித்தது. ஒரு சிலருக்கு மனித நலன் என்பது அவரும் அவரது தேசத்தையும் பற்றியது. சிலர் இந்த முழுஉலகையும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் மனித நலனில், ஒவ்வொரு விதத்தில் அக்கறை கொண்டுள்ளனர்.

எனவே இளைஞர்களிடமும் மற்றவர்களிடமும் நிகழவேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவெனில், மனிதகுலத்தோடு அவர்களுக்கு உள்ள அடையாளம் அவர்களோடு மட்டும் குறுகிவிடாமல், அவர்களைச் சுற்றியுள்ள பெரும் சமூகத்தையும், உலகையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். இன்றைய கல்வித்திட்டத்தில் விடுபடுவது இதுதான்.

நவீன கல்விமுறை அவர்களுக்கு மற்ற எதைப்பற்றியுமே எண்ணாமல், தங்களைப் பற்றி மட்டுமே எண்ண தொடர்ந்து பயிற்சியளித்துள்ளது. உலகில் நீங்கள் பார்க்கும் விஞ்ஞானத்திலே தவறேதும் இல்லை. ஆனால் அதனைக் கையாளும் போக்கில் தவறுள்ளது. இங்கிருக்கும் அனைத்துமே நமது நலவாழ்விற்காக சுரண்டப்படத்தான் என்பது போல விஞ்ஞானம் கையாளப்படுகிறது.

இப்போது நாம் பொறுப்பேயில்லாமல் அழித்து விடுகிறோம். பிறகு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றி, ஏதேனும் செய்வது பற்றிப் பேசுகிறோம், எல்லாவிதமான சரிப்படுத்தும் வேலைகளையும் செய்கிறோம். ஏனெனில் விஞ்ஞானத்தின் முழு செயல்பாடுமே அதனை உங்கள் வசதிக்கு ஏற்றபடி, உங்கள் நன்மைக்கு ஏற்றபடி எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றித்தான்.

எனவே, ஆரம்பத்தில் இந்த கிரகத்தைப் பயன்படுத்தினீர்கள். பிறகு மரங்களை, செடிகளை, விலங்குகளை, மனிதர்களையும் கூட உங்கள் வசதிக்காகவும் நலனுக்காகவும் பயன்படுத்துகிறீர்கள். இந்த மனப்பான்மை, நவீன கல்விமுறையினால் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது.

எனவே நம் நேரம், வளங்கள் மற்றும் சக்திகளை தகவல் அறிவினைப் பரிமாற்ற மட்டும் பயன்படுத்தாமல், நம் நேரத்தில், நம் சக்தியில், நம் வளங்களில் ஒரு குறிப்பிட்ட அளவினை மக்களை ஊக்கப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். கல்வியில் இந்த ஊக்கம் என்கிற பரிமாணம் சிறிதளவும் செயல்படுத்தப்படவில்லை.

உதாரணத்துக்கு, 50 வருடத்திற்கு முன்பு, சுதந்திரப் போராட்டத்தின்போது இந்த நாடு எழுச்சியூட்டப்பட்ட மனிதர்களைக் கொண்டிருந்தது. திடீரென்று மக்கள் தெருவிற்கு வந்து, நாட்டிற்காகத் தங்கள் உயிரினைத் தூக்கி வீசிடத் தயாராக இருந்தனர். இந்த 50 வருட காலத்தில் நாம் மக்களை எழுச்சியூட்ட எந்த வேலையும் செய்யவில்லை. திடீரென்று நாம் திருப்தியில்லாத, ஒரு நோக்கமில்லாத மக்களாய் உள்ளோம்.

இந்தியர்களை, இந்தியர்கள் என்று எண்ண வைப்பதே ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது, ஏனெனில் தேவையான தூண்டுதல் இங்கே இல்லாமலிருக்கிறது. எந்த வேலையும் செய்யப்படவில்லை. ஒழுங்குபடுத்தப்பட்ட வேலை எதுவும் நடக்கவில்லை. ஒழுங்கில்லாமல், குழுக்களாய் சில மக்கள் இது செய்வதும் அது செய்வதுமாய் ஏதோ நிகழ்ந்துள்ளது. ஆனால் ஒரு முறையான வேலை என ஒன்றும் செய்யப்படவில்லை.

முறையான வழியில், மக்களை ஊக்கப்படுத்த நாம் ஏதாவது செய்தாக வேண்டும். ஒழுங்கு முறையின்றி தனிமனிதர்கள் இதனைச் செய்கிறார்கள். அது நல்லதுதான். ஆனால் வெளியில் எதிரியை உண்டாக்காமல் மக்களைத் தூண்டிட ஒரு முறையான முயற்சி தேவை. மனிதனின் மிகப்பெரிய எதிரி எப்போதுமே அவனுள்தான் இருக்கிறான் என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். இந்த தூண்டுதல்தான் தேவை.

இளைஞர்களின் நலன் பற்றி அல்லது இளைஞர்கள் எனக் குறிப்பிடப்படும் அந்த மகத்தான சக்தியைப் பற்றி சிந்திக்கும் அமைப்புகள், இளைஞர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் தங்களது எல்லைகளைக் கடந்து செல்ல, அவர்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என சிந்திக்கவேண்டும்.

நாம் ஊக்கப்படுத்தப்படவில்லை என்றால், தற்போதிருக்கும் எல்லைக்குள்ளேயே தான் செயல்பட முனைவோம். ஊக்கப்படுத்தப்பட்டால் மட்டுமே எல்லைகளைக் கடந்து, மனிதர்கள் பொதுவாகச் செய்யமுடியாத செயல்களைச் செய்வோம். அப்போது தான் சமூகம் ஏதேனும் தகுதிவாய்ந்த செயல்களை செய்யும்.

துரதிர்ஷ்டவசமாக, ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால்தான் அவ்வாறு நிகழ்கிறது. அமைதியான சூழலில் மக்கள் தூண்டப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

தற்போது, ஏதாவது இயற்கை பேரிடரோ, பொதுவான பிரச்சினைகளோ வரும்போது மட்டுமே இளைஞர்கள் ஒன்றுபடுகிறார்கள். இது நல்ல விஷயம் தான். ஆனால், எல்லாம் சரியாக இருக்கும்போது தூண்டப்பட்டு, நாம் நினைத்தபடி நம் நாட்டை வைத்துக்கொள்வதும், அதற்கேற்ற சூழலை உருவாக்குவதும்தான் இப்போது உலகிற்குத் தேவை. இது ஒரு நாள் வேலையல்ல, ஆயுள் முழுதும் செய்ய வேண்டிய வேலை.

நாளை (ஆகஸ்டு 12-ந்தேதி) உலக இளைஞர்கள் தினம். 

-சத்குரு, ஈஷா யோகா மைய நிறுவனர்

Next Story