வேதிப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு


வேதிப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2018 2:36 PM IST (Updated: 11 Aug 2018 2:36 PM IST)
t-max-icont-min-icon

நம் ஒவ்வொருவர் ரத்தத்திலும் இன்றைக்கு சுமார் 300 தொழிலக வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

நமது உடல்கள் வேதி தொழிற்சாலைகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாகச் செலுத்தி வருகின்றன.

சந்தை பொருளாதாரமும், நுகர்வு கலாசாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன. பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை. பிறக்கும் குழந்தையின் உடலிலும் பல வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் செயல்படும் சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது, என்கிறது.

இக்குழுவானது, சில குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட பிறகு அதிலிருந்த ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது பல வகையான வேதிப்பொருட்கள் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும், மூளை, நரம்பு மண்டலப் பிரச்சினைகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மாசுபட்ட சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையைை-யும் சென்றடையும் என்ற உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. மனித குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பச்சிளம் குழந்தைகளின் உடலையும் பாதிப்படையச் செய்யும் நிலையை ஏற்படுத்துவது வேதனையிலும் வேதனையே! 

Next Story