ஜன்னலை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த கங்காரு!


ஜன்னலை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த கங்காரு!
x
தினத்தந்தி 11 Aug 2018 1:14 PM GMT (Updated: 11 Aug 2018 1:14 PM GMT)

ஆஸ்திரேலியாவில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் பாய்ந்த ஒரு கங்காரு, வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தில் உள்ள டீர் பார்க் என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர், மாபி அஹோனவோ.

சமீபத்தில் ஒருநாள் இரவில் இவர் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு கங்காரு ஒன்று புகுந்தது.

அந்த ஓசையில் அதிர்ந்து விழித்த மாபி, வீட்டுக்குள் என்ன புகுந்திருக்கிறது என்று தெரியாமலே வீடெங்கும் தேடினார்.

அப்போது வீடு முழுவதும் ரத்தம் சிந்தியிருந்தது.

அதைப் பின்பற்றிச் சென்று பார்த்தபோது, வீட்டின் கழிவறையில் அடிபட்ட நிலையில் ஒரு கங்காரு இருப்பதைக் கண்டார். உடனடியாக கழிவறையின் கதவைப் பூட்டிவிட்டு, போலீசாருக்கும், விலங்குகளை மீட்கும் குழுவினருக்கும் தகவல் கொடுத்தார்.

ஒரு மணி நேரத்தில் வந்த விலங்குகள் மீட்புக் குழுவினர், அடைபட்டிருந்த கங்காருவுக்கு முதலுதவி அளித்தனர். கண்ணா டியில் மோதியதால் அதற்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. பிறகு, குழுவினர் கங்காருவை மீட்டு விலங்குகள் பராமரிக்கும் இடத்துக்கு எடுத்துச்சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மீட்புக் குழுவைச் சார்ந்த மேன்பிரட் ஜாபின்ஸ்காஸ் என்பவர் கூறுகையில், “நாய்கள் துரத்தியதாலோ அல்லது கார்களின் சத்தங்களுக்குப் பயந்தோ கங்காரு ஓடிவந்து ஜன்னல் கண்ணாடியின் மீது பாய்ந்திருக்கலாம்” என்றார்.

ஆஸ்திரேலியாவில் நகர்மயமாக்கலின் ஆபத்துகள் இப்போது வெளிப்பட ஆரம்பித்திருக் கின்றன. கங்காருக்களின் வாழ் விடத்தில் வீடுகளை அமைத்திருப்பதே இந்த விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்திருக்கின் றனர்.

மறுபுறம், கங்காருகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் குரல் கொடுக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காக கங்காரு இருந்தாலும், அந்த விலங்குகளால் ஏற்படும் தொந்தரவு, அபாயம் காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு பலதரப்பில் இருந்தும் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. 

Next Story