முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை


முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2018 4:30 AM IST (Updated: 11 Aug 2018 11:07 PM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏற்கனவே அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பலத்த மழையின் காரணமாக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த நீர் காவிரி ஆறு நுழையும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஏற்கனவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கர்நாடகாவில் இருந்து வரும் கூடுதல் தண்ணீரால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், நேற்று மாலை 3 மணி நேர நிலவரப்படி திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக வந்தது.

காவிரி ஆற்றில் ஏற்கனவே இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுவதால், முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும், 5 ஆயிரம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீரும் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது.

ஏற்கனவே கடந்த மாதம் (ஜூலை) 24–ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின் காவிரியில் தண்ணீர் குறைவாக வந்ததால் மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு உபரி நீர் திறப்பு கடந்த 31–ந்தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் ஓடை போல ஓடியது. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் போது, முக்கொம்பு மேலணையில் இருந்தும் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்படும். இதனால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் கலெக்டர் ராஜாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கரையோரத்தில் உள்ள கிராம மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி செயலர் மூலமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காவிரியில் வரும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது.

வாய்க்கால் மூலம் 75 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 35 ஏரி, குளங்களில் 100 சதவீதம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 ஏரி, குளங்களில் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படும். ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படுவதால் 2 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய பொதுப்பணித்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கே.கே.நகர் சாத்தனூர் குளத்தில், காவிரி தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதை கலெக்டர் ராஜாமணி ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், செங்குளம் மற்றும் பஞ்சப்பூர் ஏரி உள்ளிட்ட ஏரி, குளங்களுக்கு காவிரி தண்ணீர் செல்ல வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும் என்று தாசில்தார்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர்கள் பாலாஜி(லால்குடி), பொன்ராமர்(ஸ்ரீரங்கம்), தாசில்தார்கள் கனகமாணிக்கம்(ஸ்ரீரங்கம்), ரேணுகா(மண்ணச்சநல்லூர்) ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story