பெரம்பூரில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 6 பேர் கைது


பெரம்பூரில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 3:00 AM IST (Updated: 12 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில், முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் ரமணா நகரைச் சேர்ந்தவர்கள் அஜித் (வயது 24), தினேஷ் ராஜா(24), சந்தோஷ்குமார்(23), சீனிவாசன்(24), மோகன்ராஜ் (20), ஜெபராஜ்(24). இவர்களுக்கும், கொடுங்கையூர் எருக்கஞ்சேரியை சேர்ந்த தங்கராஜ் (23) என்பவருக்கும் யார் பெரிய ஆள்? என்பதில் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்தநிலையில் அஜித் உள்ளிட்ட 6 பேரும் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரமணா நகரில் உள்ள சோமசுந்தரம் விநாயகர் கோவில் தெருவில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக தங்கராஜ் வருவதை கண்ட 6 பேரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் நிலைதடுமாறி விழுந்த தங்கராஜின் இடுப்பில் வைத்து இருந்த கத்தி கீழே விழுந்தது.

அதை கண்டதும் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அந்த கத்தியை எடுத்து தங்கராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தங்கராஜ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போலீசார், தங்கராஜை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித் உள்பட 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story