வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலமே இனி கட்டணங்கள் செலுத்த முடியும், அதிகாரி தகவல்


வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலமே இனி கட்டணங்கள் செலுத்த முடியும், அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2018 3:45 AM IST (Updated: 12 Aug 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வருகிற 20–ந்தேதி முதல் ஆன்லைன் மூலமாகவே கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட போக்குவரத்து அதிகாரி திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ‘பாரி வாகன்‘ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் சர்வருக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 2017–ல் அனைத்து அலுவலகங்களிலும் ‘சாரதி’ என்ற வெர்சனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பழகுனர், ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல், ஹெவி, பேட்ஜ் ஆகிய ஓட்டுனர் தொடர்பான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் மத்திய அரசின் சர்வருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அடுத்த கட்டமாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், பகுதி அலுவலகங்களிலும் ‘வாகன் 4‘ என்ற புதிய வெர்சனுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வருகிற 20–ந்தேதி முதல் மத்திய அரசின் சர்வருக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் வாகனம் தொடர்பான வாகன பதிவு, புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, தகுதி சான்று, உரிமையாளர் பெயர் மாற்றம், வாகன கடன் நிதியுதவி குறித்த பதிவுகள், அபராதம், வாகன வகை மாற்றம் என அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த மாற்றங்கள் செய்வதற்காக சிவகங்கையில் வருகிற 14–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை கட்டணங்கள் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும். காரைக்குடி பகுதி அலுவலகத்தில் 20–ந்தேதி முதல் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்படும். இந்த காலக்கட்டத்தில் கட்டணம் செலுத்திய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, தேசிய தகவல் மையத்திற்கு வழங்கப்படும். பழைய விவரங்கள் அனைத்தும் மத்திய சர்வரில் பதிவு செய்யப்படும். ‘வாகன் 4‘ 20–ந்தேதி சோதனை முறையில் ஒரு வாகனப்பதிவு, அனுமதி சீட்டு வழங்குதல் பதிவு செய்யப்படும். அதனை தொடர்ந்து காரைக்குடியில் 24–ந்தேதி சோதனை முறையில் பதிவு செய்யப்படும். அதன் பின்னர் தொடர்ந்து ஆன்லைன் மூலம் அனைத்து கட்டண வசூல்களும் செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story