பொள்ளாச்சி ஜோதி நகரில் ரூ.4½ கோடியில் அம்மா பசுமை பூங்கா அமைக்க திட்டம்
பொள்ளாச்சி ஜோதி நகரில் ரூ.4½ கோடியில் அம்மா பசுமை பூங்காஅமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகராட்சி மற்றும் தாலுகா பகுதிகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்கு இடம் இல்லை. டாப்சிலிப், ஆழியாறு, குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் ஏழை, எளிய மக்களால் அடிக்கடி அங்கு செல்வது சிரமம். ஏதாவது விஷேச நாட்களுக்கு குடும்பத்துடன் செல்வார்கள். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொள்ளாச்சியில் நீண்டநேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கவும், பொழுதை கழிக்கவும் இடம் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி ஜோதி நகரில் அதிநவீன வசதிகளுடன் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி ஜோதி நகரில் நகராட்சிக்கு சொந்தமான 4¼ ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மூலதன மானிய நிதி மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் அதிநவீன வசதிகளுடன் அம்மா பசுமை பூங்கா அமைக்க நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஜோதி நகரில் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பூங்காவில் மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது திருப்பூர் மண்டல செயற்பொறியாளர் வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) முருகேசன், உதவி பொறியாளர் சாந்தகுமார், முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் துணை தலைவர் விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரம், அருளானந்தம், தனசேகர், கிட்டான் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–
பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள அகலமான நடைபாதை, டைனோசர் பூங்கா, வண்ணத்துபூச்சி பூங்கா, நறுமண தாவரங்கள், மூலிகைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பூங்காவை சுற்றி வரும் வகையில் குழந்தைகளுக்கு மின்சார ரெயில் அமைக்கப்படுகிறது. இதை தவிர குழந்தைகளுக்கு விளையாட்டு திடல், திறந்தவெளி கூட்டரங்கு, சறுக்கு விளையாட்டு மைதானம், ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி கூடம், தியான மண்டபம், செயற்கை நீருற்று, உணவு கூடம், ஓய்வு எடுக்க நிழற்கூரைகள், மின் விளக்குகள், கல்லால் அமைக்கப்படும் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
இதை தவிர பலவகையான மரம், பூச்செடிகள், புல்வெளிகள் அமைத்து பூங்கா முழுவதும் பசுமையாக சூழல் உருவாக்கப்படும். மேலும் பூங்காவரும் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்கப்பட உள்ளது. இந்த பூங்கா பொள்ளாச்சி தாலுகா பகுதி மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பொழுதுபோக்கிற்கு நல்ல இடமாக இருக்கும். முதற்கட்டமாக ரூ.1 கோடியில் சுற்றுச்சுவர், பூங்காவில் உள்ள நடைபாதை, மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கி ஒராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.