லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
லாரி பழுதாகி நின்றதால் திம்பம் தலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. அதனால் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதையில் எப்போதும் பஸ், லாரி, வேன், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வந்துகொண்டு இருக்கும்.
குறுகிய வளைவுகளில் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு உர மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. திம்பம் மலைப்பாதையில் 9–வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது லாரி திடீரென பழுதாகி நின்று விட்டது. இதனால் மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் ஆசனூர் சோதனை சாவடியிலும், சத்தியமங்கலத்தில் இருந்து வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி பாதையின் ஓரத்தில் இழுத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு பிறகு வாகனங்கள் செல்லத்தொடங்கின. போக்குவரத்து பாதிப்பால் பாதிக்கப்பட்ட பஸ், வேன், காரில் வந்த பயணிகள், ‘அதிக பாரங்களை ஏற்றிவரும் லாரிகள்தான் மலைப்பாதையில் பழுதாகி நின்றுவிடுகின்றன. இது தெரிந்தும் போக்குவரத்து போலீசார் எப்படி இது போன்ற லாரிகளை அனுமதிக்கிறார்கள்?‘ என்று வேதனையுடன் கூறினார்கள்.