மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு + "||" + Water level in Cauvery River in Hogenakkal has increased by 80 thousand cubic feet

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக–கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வந்து கொண்டிருந்த நீர்வரத்து இரவில் 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி ஆற்றில் இருபுறமும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் மாலையுடன் பரிசல் சவாரியும் நிறுத்தப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காவிரி கரையோரம் போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்தை தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.