மாவட்ட செய்திகள்

பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தம் + "||" + Paramathi Vellore Cauvery coastal parking area

பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தம்

பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தம்
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்,

மேட்டூர் அணையில் இருந்து 1¼ லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி பரமத்தி வேலூர் வட்டத்தில் உள்ள சோழசிராமணி, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


இதனால் ஜமீன்எலம்பள்ளி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம், கண்டிபாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொடுமுடி, ஊஞ்சலூர், கருவேலம்பாளையம் உள்ளிட்ட ஈரோடு மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜோடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு சுற்றுலா வருவோர் அண்ணா பூங்காவிற்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் காவிரி ஆறு மற்றும் ராஜா வாய்க்காலில் இறங்கி குளிக்கவோ, செல்போன்களில் செல்பி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.