கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வல்லுனர் குழு ஆய்வு


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வல்லுனர் குழு ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2018 4:15 AM IST (Updated: 12 Aug 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வல்லுனர் குழு ஆய்வு செய்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவெடுத்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றன. இதனை எதிர்த்து திருமானூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், மணல் குவாரியை தடை செய்ய வேண்டும். மணல் குவாரி அமைத்தால் சுற்றுப்புற 8 மாவட்ட மக்களின் நீராதாரம் பாதிக்கப்படும். விவசாயம் முற்றிலும் பொய்த்து போய்விடும் எனக்கோரி கொள்ளிடம் நீராதார குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க தற்காலிக தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து 4 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த வல்லுனர் குழு அதிகாரிகள் அருண்தம்புராஜ், மோகன், கணபதி வெங்கடசுப்பிரமணியன் மற்றும் புகழேந்தி ஆகியோர் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைய உள்ள இடத்தினை நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர்களிடம் கருத்து கேட்டனர். அப்போது, வல்லுனர் குழுவிடம் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், வக்கீல் முத்துக்குமரன் மற்றும் வடிவேல்முருகன், மாரியம்மாள் உள்ளிட்டவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஏற்கனவே இந்த பகுதியில் சுமார் 20 ஆண்டுகள் மணல் குவாரி இயங்கி வந்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போய்விட்டது. இதனால், குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் மணல் குவாரி அமைத்தால் இப்பகுதி பாலைவனமாக மாறிவிடும் எனக்கூறினர். மேலும், தற்போது மணல் குவாரி அமையவுள்ள இடத்தின் அருகே சுடுகாடு, இடுகாடு மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

எனவே, அங்கு மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என குழுவினரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மணல் குவாரி அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்த குழுவினர், சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ள இடம் மற்றும் குடியிருப்புகள் உள்ள இடங்களையும் பார்வையிட்டனர். மேலும் அவர்கள், பொதுமக்களின் கருத்துக்கள், இங்கு உள்ள நிலவரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறி சென்றனர். 

Next Story