கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:15 AM IST (Updated: 12 Aug 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.போலீசார் அவர்களை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை,

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் உடுமலையை அடுத்த குரங்குட்டையில் உள்ள குரல்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதிலிருந்து தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டுறவு சங்கத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டுறவு சங்கத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்தனர். மேலும் நேற்றுகாலை கூட்டுறவு சங்கத்தின் முன் திரண்ட கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டுறவு சங்கத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். அந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குரல்குட்டை கிளைச்செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய செயலாளர் கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் பாலதண்டபாணி, ஜெகதீசன், ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் குரல்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டியும், கண்ணமநாயக்கனூர், ஆண்டிக்கவுண்டனூர், உரல்பட்டி உள்பட 11 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 51 பேர் உறுப்பினராக உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30–ந்தேதி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தல் போட்டியிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். மேலும் பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் 37 வேட்பாளர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில் மீண்டும் கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மீண்டும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் 11 பேர் மட்டுமே வேட்பு செய்ததாக கூறி 11 நிர்வாகிகள் தேர்வு பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட துணைப்பதிவாளருக்கு புகார் மனு கொடுத்துள்ளோம். மேலும் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு காவல்துறையிடம் முறையாக அனுமதியும் பெற்றோம்.

ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லையென்று இரவோடு இரவாக போலீசார் வீட்டுக்கதவில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றுள்ளனர். இதையடுத்து மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் முறைகேடுகளுக்கு எதிராய்த்தொடர்ந்து போராடுவோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story