விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் கவர்னருடன் இணைந்து செயல்பட தயார்: நாராயணசாமி பேட்டி
விதிமுறைகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் இணைந்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 29–க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர். எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கேரள முதல்–அமைச்சர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். புதுச்சேரி மாநில அரசு சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறினேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பது மட்டுமின்றி, கேரள மக்களோடு எங்கள் மாநில மக்களும் இருப்பார்கள் என்று அவரிடம் தெரிவித்தேன்.
புதுச்சேரி மாநில அரசின் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு ரூ.1 கோடி வழங்க உள்ளோம். அதுமட்டுமின்றி கேரளா மாநிலத்துக்கு மீட்பு பணிகளுக்காகவும், இயல்பு வாழ்க்கை திரும்பவும் அவர்களுக்கு உதவி செய்ய முதல்–அமைச்சர் நிவாரண நிதியில் தனி கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் வசூலித்து கேரளா மாநிலத்துக்கு அனுப்ப உள்ளோம். எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களால் முடிந்த நிதியுதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கேரளா மாநிலத்தின் ஒரு பகுதியாக நம்முடைய மாகே பகுதி உள்ளது. அவர்களும் நம்முடைய சசோதரர்கள் தான். ஆகவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் தங்களால் முடிந்தவரை காசோலையாகவும், வரைவோலையாகவும் எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மருந்து, துணிகள், அரிசி போன்ற நிவாரண பொருட்களை தாராளமாக கொடுத்து உதவ வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இறந்த மறுநாள் அரசு விடுமுறை விடப்பட்டது. கருணாநிதி நினைவை போற்றும் வகையில் அவருக்கு முழு வெண்கல சிலை மாநில அரசு சார்பில் வைப்பது, கருணாநிதி நினைவாக அவருடைய பெயரில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறையில் ஒரு இருக்கை அமைப்பது, புதுச்சேரி, காரைக்காலில் 2 சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது, காரைக்கால் கல்லூரி மேற்படிப்பு மையத்துக்கு பெயர் வைப்பது ஆகிய 4 தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
கருணாநிதிக்கு விரைவில் சிலை அமைக்க குழு அமைக்க உள்ளோம். அந்த குழுவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இருப்பார்கள். புதுவை மாநிலத்தில் எங்கு சிலை வைப்பது என்பதை அந்த குழு முடிவு செய்யும்.
புதுச்சேரி கவர்னரின் உத்தரவை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கடந்த 5–ந் தேதி குறிப்பிட்டிருந்தேன். அதற்கு பதில் அளித்து கடந்த 6–ம் தேதி அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் மாநில வளர்ச்சிக்கு அவர் பாடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு 2 ஆண்டுகளில் கவர்னர் எந்தவிதத்தில் பாடுபட்டுள்ளார்? இலவச அரிசி வழங்கும் திட்டம், சென்டாக் மூலம் ஏழை மாணவர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற பல்வேறு திட்டங்களுக்கான கோப்புக்களை முடக்கும் வேலையைத் தான் கவர்னர் செய்து வருகிறார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அரசின் எண்ணம். அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். அதற்கு கேள்வி கேட்க வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை. கவர்னர் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் அவருடன் இணைந்து செயல்பட நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்ப்யூட்டர் சையின்ஸ் ஆகியவற்றில் 240 இடங்கள் இந்த ஆண்டு அதிகமாக பெறப்பட்டது. இந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் சுயநிதி அடிப்படையில் மாணவர்களை சேர்க்க உள்ளோம். இதில் புதுவை மற்றும் வெளிமாநில மாணவர்களும் சேரலாம். இதன் மூலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியை பொறியியல் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான எல்லா தகுதியும் இருப்பதால், இதனை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுமட்டுமின்றி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 20 இடங்கள் அதிகமாக பெற்றுள்ளோம். இதனை சென்டாக் மூலம் சுயநிதி அடிப்படையில் நிரப்ப உள்ளோம். அந்த வருவாயைக் கொண்டும் கல்லூரியை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கால்நடை மருத்துவக் கல்லூரியையும், பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தையும் இணைத்து வேளாண் பல்கலைக்கழகமாக மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.