தமிழ் மீது கொண்ட அக்கறையால் கருணாநிதியை உலக தமிழர்கள் போற்றுவார்கள் - நாராயணசாமி புகழாரம்
தமிழ் மீது கொண்ட அக்கறையால் கருணாநிதியை உலக தமிழர்கள் போற்றுவார்கள் என முதல்–அமைச்சர் நாராயணசாமி புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில தெற்கு தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், புதிய நீதி கட்சி பொன்னுரங்கம், ராஷ்டிரீய ஜனதா தளம் சஞ்சீவி, மனிதநேய மக்கள் கட்சி பஷீர்அகமது, திராவிட கழகம் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
கருணாநிதி தனது 80 ஆண்டு கால அரசியல் பயணத்தில் 50 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர். அவர் கழகத்தின் தொண்டர்கள் மீது அன்பு, பாசம் அரவணைப்போடு இருப்பார். தோல்வியை கண்டு கலங்காத தலைவர். அகில இந்திய அளவில் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிரதமர்களை உருவாக்கும் தகுதி பெற்றவர். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் வைத்திருந்த பற்றும் பாசத்தால் கருணாநிதியை உலக தமிழர்கள் போற்றுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.