சைக்கிளில் பள்ளிகளுக்குச் சென்றால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்: மாணவர்களுக்கு, கவர்னர் அறிவுரை


சைக்கிளில் பள்ளிகளுக்குச் சென்றால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்: மாணவர்களுக்கு, கவர்னர் அறிவுரை
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 9:12 PM GMT)

மாணவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்றால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுரை கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது தூய்மை பணிக்கும், மழைநீர் சேகரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு நகர பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முத்தியால்பேட்டை காந்திவீதியில் சவுடாம்பிகை அம்மன் கோவில் அருகே சென்ற போது அங்கு மாணவர்கள் பஸ்சுக்காக காத்து நிற்பதை பார்வையிட்டார்.

பின்னர் அவர்களிடம், நீங்கள் சைக்கிளில் பள்ளிகளுக்குச் சென்றால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் வீட்டில் இருந்து 3 முதல் 5 கி.மீ. தூரம் வரை உள்ள பள்ளிகளுக்கு வாரம் ஒருமுறை சனிக்கிழமையாவது மாணவர்கள் சைக்கிளில் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் அறிவையும் கொடுக்கும். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு செல்வது தற்போது புதுச்சேரி பைக் சிட்டியாக உணரப்படும் நிலை மாறும்.

வரும் காலங்களில் முதியவர்கள் மோட்டார் சைக்கிள்களுக்குப்பதில் சைக்கிள்களை பயன்படுத்துவார்கள் என்றார். பின்னர் அங்கு பஸ்சுக்காக காத்த நின்ற பொதுமக்களிடம், குறைவான தூரம் செல்ல சைக்கிள்களை பயன்படுத்துங்கள். வாரத்தில் ஒருநாளாவது சொந்த வாகனங்களை தவிர்த்து விட்டு பொது வாகனங்களை பயன்படுத்துங்கள். இது சத்தம் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுகளை குறைக்கும். என்றார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது சாலை ஓரத்தில் பேனர்களை அகற்றி சுத்தமாக வைத்திருப்பதை பார்த்த நகராட்சி அதிகாரிகளை பாராட்டினார். இந்த கள ஆய்வில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் மீண்டும் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். ஆய்வின் போது கவர்னரின் கூடுதல் செயலாளர் சீனுவாஸ், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story