ஆங்கில மருத்துவத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்ற கருத்து தவறானது அமைச்சர் பேட்டி


ஆங்கில மருத்துவத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்ற கருத்து தவறானது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2018 4:30 AM IST (Updated: 12 Aug 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில மருத்துவத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்ற கருத்து தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும் சுக பிரசவம் நடைபெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுவாக மகப்பேறு தாய் இறப்பு சதவீதத்தை அரசு குறைத்து உள்ளது. ஆனால் கர்ப்பிணிகளின் உயர் ரத்த அழுத்தம் தான் அரசிற்கு சவலாக உள்ளது. அதை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக புதிய முயற்சியை தமிழக அரசு எடுத்து உள்ளது.

வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி வரை சர்க்கரையில் அக்கரை என்ற திட்டம் தமிழக சுகாதாரத்துறை மூலம்அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மகப்பேறு இறப்பை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை அரசிற்கு உள்ளது.

தமிழக அரசு ஆங்கில மருத்துவதிற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்ற கருத்து தவறானது. தமிழக அரசு இந்திய மருத்துவமான பாரம்பரிய மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உளுந்து தைலத்தை அடிவயிற்றில் தடவினால் சுக பிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், இது போன்ற 11 வகையான இயற்கை மூலிகை மருந்துகள் அடங்கிய அம்மா மகப்பேறு பெட்டகத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. மகப்பேறு இறப்பை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒரு லட்சம் பிரசவத்தில் இறப்பு என்பது 66 ஆக இருந்தது.

இதற்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை 62 ஆக குறைத்து உள்ளோம். மேலும் குறைப்பதற்காக தான் சர்க்கரையில் அக்கறை திட்டத்தை கொண்டுவர உள்ளோம். கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மீட்பு மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் உத்தர விடும் பட்சத்தில் உடனடியாக தமிழகத்தில் இருந்து சுகாதார அலுவலர்கள் சுகாதார பணிகளுக்காக கேரளா செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story