மாவட்ட செய்திகள்

கேரள போலீஸ் காவலில் மர்ம சாவு: குமரி வாலிபரின் உடல் 17 நாட்களுக்கு பிறகு சொந்த ஊரில் அடக்கம் + "||" + Mystery of Police in police custody: Kumari Waliyar's body was buried in his native place after 17 days

கேரள போலீஸ் காவலில் மர்ம சாவு: குமரி வாலிபரின் உடல் 17 நாட்களுக்கு பிறகு சொந்த ஊரில் அடக்கம்

கேரள போலீஸ் காவலில் மர்ம சாவு: குமரி வாலிபரின் உடல் 17 நாட்களுக்கு பிறகு சொந்த ஊரில் அடக்கம்
கேரள போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் 17 நாட்களுக்கு பின்பு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தின் போது கேரள அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
களியக்காவிளை,

களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சைமன். இவருடைய மகன் அனீஷ் (வயது 20). கூலி தொழிலாளி. இவரை கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு வழக்கு தொடர்பாக கேரள போலீசார் அழைத்து சென்றனர். கடந்த 25-ந் தேதி அனீஷ் இறந்து விட்டதாக அவரது உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


அப்போது அனீஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கேரள போலீசார் அடித்து கொன்றிருக்கலாம் என்று குற்றம்சாட்டினர். மேலும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த அனீஷ் உடலையும் வாங்க மறுப்பு தெரிவித்து கடந்த 17 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அனீசின் சாவுக்கு நீதி கேட்டும், இவரது சாவில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, வாலிபரின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவரது உறவினர்கள் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதையடுத்து வாலிபர் இறந்த 17 நாட்களுக்கு பின்பு நேற்று அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

அவரது உடல் களியக்காவிளை அருகே இஞ்சிவிளை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. உடலுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வாலிபரின் உடல் அவரது சொந்த ஊருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், கேரள, தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஊர்வலம் சாலையோரமாக வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற ஒரு கேரள அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதனால், அந்த பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள மற்றும் தமிழக போலீசார் ஊர்வலத்தை ஒழுங்கு படுத்தினர். பின்னர், களியக்காவிளையில் உள்ள ஒரு ஆலயத்தில் இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.