மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவரை கொன்ற 2 பேர் கைது தீர்த்துக் கட்டிய உடலை தண்டவாளத்தில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் + "||" + Two people killed by the auto driver were reportedly shot dead by the body

ஆட்டோ டிரைவரை கொன்ற 2 பேர் கைது தீர்த்துக் கட்டிய உடலை தண்டவாளத்தில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம்

ஆட்டோ டிரைவரை கொன்ற 2 பேர் கைது தீர்த்துக் கட்டிய உடலை தண்டவாளத்தில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம்
ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோ டிரைவரை கொன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தீர்த்துக்கட்டிய உடலை அவர்கள் தண்டவாளத்தில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டம் மச்சக்கரை மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் ரூபன் டேனி (வயது 28), ஆட்டோ டிரைவர். இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 14-ந் தேதி சவாரிக்காக சென்ற ரூபன் டேனியை காணவில்லை.


இதுதொடர்பாக அவருடைய தந்தை சுந்தர்ராஜ், வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் ரூபன் டேனி மாயமான வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ரூபன் டேனி கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

மேலும் அவரை கொன்றதாக ஈத்தாமொழி கீரிவிளையை சேர்ந்த வினோத் (27), கணபதிபுரத்தை சேர்ந்த அரவிந்த் (23) ஆகிய 2 பேர் போலீசிடம் சிக்கினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

ரூபன் டேனி வெள்ளிச்சந்தை பகுதியில் ஆட்டோ டிரைவராக ஓட்டி வந்தாலும், அவர் சில மாதங்களாக கருங்கலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அந்த வீட்டில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து சந்தோசமாக பொழுதை கழிப்பது வழக்கம். அந்த வகையில் வினோத், அரவிந்த் மற்றும் ஒருவர் என 3 பேர் அடிக்கடி ரூபன் டேனியுடன் சந்தித்து மது அருந்தி வந்தனர்.

இதனையடுத்து 4 பேரும் நெருங்கிய நண்பர்களாக மாறி உள்ளனர். அந்த சமயத்தில், ரூபன் டேனி காயங்களுடன் கருங்கலில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வினோத்திடம், தன்னை சிலர் தாக்கியதாகவும், அதற்கு அவர்களை பழிவாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு வினோத் ஒத்துழைக்கவில்லை. இதனால் வினோத்தை ரூபன் டேனி தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரூபன் டேனி மீது வினோத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனை தன்னுடைய நண்பர் அரவிந்த் மற்றும் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ரூபன்டேனியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று 2 பேரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 3 பேரும் திட்டமிட்டபடி ரூபன்டேனியை வரவழைத்துள்ளனர். அன்றைய தினம் பல இடங்களில் சுற்றி திரிந்து மது அருந்தியுள்ளனர். இறுதியாக கீரிவிளையில் உள்ள ஒரு தோட்டத்துக்கு ரூபன்டேனியை அழைத்து சென்றனர். அங்கு நிதானத்தை இழக்கும் அளவுக்கு அவருக்கு மதுவை ஊற்றி கொடுத்தனர்.

நிதானத்தை இழந்ததும் ரூபன் டேனியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். லுங்கியால் கழுத்தை இறுக்கி அவரை கொன்றனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக சாமிதோப்பு பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் உடலை வீசி விட்டு சென்றனர். உடல் மீது ரெயில் ஏறியதால், அடையாளம் தெரியாத அளவுக்கு ரூபன் டேனியின் உடல் சிதைந்து போனது.

இதனையடுத்து உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி, பறக்கின்கால்மடம் பகுதியில் புதைத்து விட்டனர். இந்தநிலையில் ரூபன்டேனியை தீர்த்துக் கட்டியதை போன்று உன்னையும் கொன்று விடுவதாக ஒருவரிடம் வினோத் தெரிவித்துள்ளார். இதனால் அவர் நண்பருடன் போலீசிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.

இந்த தகவலை வினோத், அரவிந்த் ஆகிய 2 பேரும் வாக்குமூலமாகவும் தெரிவித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.