சுதந்திர தினம் கொண்டாட காகிதத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும்


சுதந்திர தினம் கொண்டாட காகிதத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:51 PM GMT (Updated: 11 Aug 2018 10:51 PM GMT)

பிளாஸ்டிக் இல்லா சுதந்திர தினம் கொண்டாட காகிதத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை,

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா சுதந்திர தினம் கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேசிய கொடி ஒவ்வொரு குடிமகனுக்கும், வேலையில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவும், உண்மையான பாதையில் செல்லவும், தர்மத்தின் படியும், சட்டத்தின் படியும், நடப்பதற்கான உத்வேகத்தை அளிக்கக் கூடியது.

இன்றைய கால கட்டத்தில் உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழித்திட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்காக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. கால்நடைகள், விலங்குகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் வருகிற 15-ந் தேதியன்று நடைபெறும் 72-வது சுதந்திர தினத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் காகிதத்தினால் தயாரிக்கப்பட்ட இந்திய தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும்.

நம் வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமான, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு நாம் வழிவகை செய்வோம். ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம்’, ‘பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்‘’ என்ற அடிப்படையில் சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தாமல் காகிதத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story